முதியோர் உதவித்தொகை பத்து மாதங்களாக கிடைக்கல ஜமாபந்தியில் குவிந்த மனுக்கள்
திருவாடானை : பத்து மாதங்களாக முதியோர் உதவித் தொகை கிடைக்கவில்லை என திருவாடானை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மூதாட்டிகள் கண்ணீருடன் மனுக்கள் அளித்தனர்.திருவாடானை தாலுகாவில் மே 20ல் தனித்துணை கலெக்டர் கிருஷ்ணவேனி தலைமையில் ஜமாபந்தி துவங்கியது. 20ல் மங்களக்குடி, 21ல் புல்லுார், 23ல் தொண்டி, நேற்று திருவாடானை பிர்காக்கள் ஆய்வு செய்யப்பட்டது. பொதுமக்களிடமிருந்து 240 மனுக்கள் பெறப்பட்டது.ஏழு பேருக்கு பட்டா, 10 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டது. தாசில்தார் ஆண்டி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். இந்த ஜமாபந்தியில் 50க்கும் மேற்பட்ட மூதாட்டிகள் முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்டு விட்டதாக கூறி மனுக்களை கொடுத்தனர்.தொண்டி அருகே சேமவயல் கிராமத்தை சேர்ந்த பூரணம் 75, கூறியதாவது:கணவர் இறந்து விட்டார். முதியோர் உதவித் தொகை பெற்று வந்தேன். கடந்த 10 மாதங்களாக உதவித் தொகை நிறுத்தப்பட்டு விட்டது. எனக்கு எந்தவித ஆதரவும் இல்லை. தாலுகா அலுவலகத்திற்கு சென்று கேட்டால் போயுட்டு அப்புறம் வாம்மா என்பார்கள். பிறகு ஒரு வாரம் கழித்து செல்வேன்.மூன்று மாதம் ஆகும். அப்புறம் பார்க்கலாம் என்பார்கள். எனக்கு இந்த பணம் தான் ஆதரவு. குடும்பத்தில் எனக்கு எந்த ஆதரவும் இல்லை என்று அதிகாரி காலில் விழுந்து கெஞ்சினேன். ஆனால் அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் வெளியே போம்மா என்று பேசினார்கள். இந்த ஜமாபந்தியில் மனு கொடுத்துள்ளேன். கடவுள் தான் கருணை காட்ட வேண்டும் என்றார்.