எமனேஸ்வரம் எம தீர்த்த மாமாங்க குளத்தில் விடப்படும் கழிவு நீர் எம்.எல்.ஏ., நிதி ரூ.10 லட்சம் வீண்
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் எம தீர்தம்எனப்படும் மாமாங்க தெப்பக்குளத்தில் நகராட்சி கழிவு நீர் விடப்படும் நிலையில் கடந்த ஆட்சியில் செலவிடப்பட்ட எம்.எல்.ஏ., நிதி ரூ.10 லட்சம் வீணாகி உள்ளது. எமனேஸ்வரத்தில் சொர்ணகுஜாம்பிகை, எமனேஸ்வரமுடையவர்கோயில் உள்ளது. கோயில் எதிரில் கும்பகோணத்திற்கு அடுத்தபடியாக மாமாங்க தெப்பக்குளம் இருக்கிறது. இது எம தீர்த்தம் என அழைக்கப்படும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் இங்கு சுவாமிக்கு தீர்த்த வாரி உற்ஸவம் நடந்து வந்தது. தொடர்ந்து தெப்பக்குளம் கழிவு நீர் நிரம்பி சீமைக்கருவேல மரங்கள்சூழ்ந்த நிலையில் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதையடுத்து கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கலெக்டர் பார்வையிட்டு எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டது. அப்போது ஒரு பகுதியில் பேவர் கல் தளம் அமைக்கப்பட்டு படித்துறைகள் கட்டி, கம்பி வேலி அமைத்தனர். ஆனால் பராமரிக்கப்படாமல் குளம் கைவிடப்பட்ட நிலையில் பக்தர்களின் மகிழ்ச்சி சில மாதங்களே இருந்தது.இக்குளக்கரைகளில் மூன்று நகராட்சி சுகாதார வளாகங்கள் கட்டப்பட்ட சூழலில் ஒட்டு மொத்த கழிவும் குளத்தில் நேரடியாக கலக்கிறது. இதனால் கழிவுநீர் தேங்கிய குளத்திற்கு அருகில் உள்ள நீர் நிலைகள் அசுத்தம் அடைவதால் தொற்றுநோய் பீதியில் மக்கள் உள்ளனர். எமன் ஈஸ்வரனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற கோயில் குளம் வீணாகி வருவதை பார்த்து பக்தர்கள் மனம் வருந்துகின்றனர். ஆகவே வரும் நாட்களில்உடனடியாக கழிவு நீர் கலப்பதை தடுத்து குளத்தை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.