உத்தரகோசமங்கை கோயிலில் புதிய சந்தனக்காப்பில் மரகத நடராஜர்
உத்தரகோசமங்கை: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில், ஆருத்ரா தரிசன விழாவில் புதிய சந்தனக்காப்பு அலங்காரத்தில் மரகத நடராஜருக்கு பூஜைகள் நடந்தன.உலகில் முதலில் தோன்றிய சிவன் கோயில் என அழைக்கப்படும் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலையில் கடந்தாண்டு பூசப்பட்ட சந்தனக்காப்பு அகற்றப்பட்டு மூலவர் பச்சை மரகத நடராஜரின் திருமேனியில் 32 வகையான அபிஷேகம் செய்து அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் சந்தனாதி தைலம் பூசப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு திரையிட்டு மரகத நடராஜர், சிவகாமி அம்மனுக்கு புதிய சந்தனம் காப்பிடும் நிகழ்ச்சி நடந்தது. 50 கிலோவிற்கு மேல் சந்தனம் பயன்படுத்தப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 மணிக்கு அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. அருகே உள்ள கல் தேர் மண்டபத்தில் கூத்தர் பெருமான் அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளினார். மாலையில் பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், மாணிக்கவாசகர் பெருமானுக்கு காட்சி கொடுத்து புறப்பாடும் நடந்தன.நேற்று முன்தினம் துவங்கி நேற்று இரவு வரை தொடர்ந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பிறகு நடராஜரின் சன்னதி இரும்பு கதவால் பாதுகாப்பாக சாத்தப்பட்டது.அடுத்த ஆருத்ரா விழா வரை சந்தனம் காப்பிடப்பட்ட மரகத நடராஜரின் தரிசனத்தை கம்பி கதவுகளுக்கு இடையே மட்டுமே பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும்.