திருவெற்றியூர் கோயிலை சுற்றி ஆக்கிரமிப்பு
திருவாடானை : திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலை சுற்றிலும் ஆக்கிரமிப்பால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்.திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாகம்பிரியாள் கோயில் உள்ளது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. இக்கோயிலில் முதல் நாள் தங்கியிருந்து மறுநாள் கோயில் முன்புள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது சிறப்பு என்பதால் வெளி மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் கூடி அங்குள்ள மண்டபங்களில் தங்குவார்கள்.இது தவிர செவ்வாய், வெள்ளி வார நாட்களில் பெண்கள் கூட்டம் அலைமோதும். ஆடி வெள்ளி உள்ளிட்ட திருவிழா நாட்களில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவார்கள். கோயிலை சுற்றிலும் நான்கு பக்கமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளது.பக்தர்கள் கூறுகையில், தேரோடும் வீதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சித்திரை மாத தேரோட்டத்தில் ஆக்கிரமிப்பால் தேர் நிலைக்கு சென்று சேர்வதில் சிரமமாக இருக்கும். ஆடி மாதம் பல ஆயிரம் பக்தர்கள் கூடுவார்கள்.அப்போது நடந்து செல்ல முடியாத வகையில் சிரமப்படுகிறார்கள். பஸ்கள் வந்து திரும்பும் இடத்தில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.