மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு
ராமேஸ்வரம்; பாம்பனில் இருந்து ஆக., 5ல் விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற, 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து புத்தளம் சிறையில் அடைத்தனர். நேற்று, மீனவர்கள், 10 பேரையும் புத்தளம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மீனவர்களை, ஆக., 25 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதே போல, ராமேஸ்வரத்தில் இருந்து ஆக., 5ல் மீன் பிடிக்க சென்ற ராமநாதபுரம், திருப்பாலைக்குடி மீனவர்கள், விமல்ராஜ், 24, மாதேஷ், 20, கார்த்தி, 21, சத்தீஸ்வரன், 21, ஆகியோரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை செப்., 1 வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ஆக., 11 முதல் வேலை நிறுத்தம் செய்து வரும் ராமேஸ்வரம் மீனவர்கள், நேற்று நடந்த சமரச பேச்சு தோல்வி அடைந்ததால், இன்று தங்கச்சிமடத்தில் திட்டமிட்டபடி ரயில் மறியல் நடத்தப்படும் என, அறிவித்துள்ளனர்.