வைக்கோல் விலை வீழ்ச்சி விவசாயிகள் பாதிப்பு
ஆர்.எஸ்.மங்கலம் : திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட பல்வேறு பகுதிகளிலும் நெல் அறுவடை நடக்கும் நிலையில் வைக்கோல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இப்பகுதியில் இயந்திரம் மூலம் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோல் தேங்கியுள்ளது. இவற்றை கால்நடைகளின் தீவமைாகவும், காளான் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுகிறது. இவற்றை இயந்திரம் மூலம் சுருட்டி குறிப்பிட்ட எடை கொண்ட கட்டுகளாக கட்டி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.கடந்த ஆண்டு நெல் அறுவடை நேரத்தில் ஒரு கட்டு வைக்கோல் ரூ.80 வரை வாங்கப்பட்டது. தற்போது கட்டு ரூ.40க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளின் வயல்களில் இருந்து வைகோலை வியாபாரிகள் இடைத்தரகர்கள் மூலமே வாங்க வேண்டி உள்ளதால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தொகையை இடைத்தரகர்கள் எடுத்துக் கொள்வதால் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வைக்கோல் வியாபாரிகள் தெரிவித்தனர்.