உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மிளகாய் சாகுபடியில்  நஷ்டத்தை தவிர்க்க விவசாயிகளுக்கு அறிவுரை; பயிரில் நோயை தடுக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை 

மிளகாய் சாகுபடியில்  நஷ்டத்தை தவிர்க்க விவசாயிகளுக்கு அறிவுரை; பயிரில் நோயை தடுக்க தோட்டக்கலைத்துறை நடவடிக்கை 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டிற்குரிய மிளகாய் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன. இதில் நஷ்டத்தை தவிர்க்க விதைக்கும் போதே பயிர் பாதுகாப்பு, நோய் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும் என தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. மாவட்டத்தில் ஆண்டு தோறும் 50 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாண்டு துவக்கத்தில் மார்ச் மாதத்தில் பெய்த மழையின் காரணமாக ஏற்பட்ட குளிர் கால சூழ்நிலையால் மிளகாய் பயிரில் காய் அழுகல் நோயை ஏற்படுத்தும் காரணிகள் பெருகி காய் அழுகல் நோய் பரவலாக எல்லா பகுதிகளிலும் காணப்பட்டது. இந்நோயால் காய்த்த மிளகாய் பழங்கள், வெளிரிய நிறமாக மாறி சோடையாவதால் தரம் குறைந்து குறைந்த விலை கிடைத்தது. இதனால் விவசாயிகளுக்கு அதிக நஷ்டம் ஏற்பட்டது. காய் அழுகல், சோடையாகுதல் தொடர்பான நோய் காரணிகள் விதை மூலம் பரவும் தன்மையுள்ளது. இந்நோய் காரணிகள் தொடர்ந்து மிளகாய் சாகுபடி செய்யப்படும் நிலத்தில் தங்கியிருக்கும். இவ்வாறான காய் அழுகல் நோய் காரணிகள் ஆண்டு தோறும் மிளகாய் சாகுபடி செய்யப்படும் போது காய் பிடிக்கும் தருணங்களில் காய் அழுகல் நோய் பயிரில் ஏற்படுகின்றன. நடப்பாண்டில் இதை தவிர்க்க தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் ஆறுமுகம் கூறியதாவது: இந்நோயினை தவிர்க்க நாற்றுகள் உற்பத்தியின் போது தகுந்த பயிர் பாதுகாப்பு மருந்துகளை கொண்டு நடவு செய்யும் மிளகாய் விதைகளை நேர்த்தி செய்யவேண்டும். ஒரு கிலோ மிளகாய் விதையை 5 கிராம் சூடோமோனஸ் அல்லது 10 கிராம் டிரைகோடெர்மா விரிடி போன்ற உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளுடன் கலந்து விதை நேர்த்தி செய்யலாம். திரம் அல்லது கெப்டான் போன்ற ரசாயன பூஞ்சான கொல்லிகளுடன் ஒரு கிலோ மிளகாய் விதைக்கு 5 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்யலாம். தற்சமயம் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மிளகாய் விதைகளை நாற்றாங்காலில் விதைக்கும் முன் இவ்வாறு விதை நேர்த்தி செய்தபின் விதைக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு அருகேயுள்ள தோட்டகலைத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றார். -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை