உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வராததால் விவசாயிகள் வேதனை: சாகுபடி பணிகளுக்காக விரைவில் வழங்க வலியுறுத்தல்

மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வராததால் விவசாயிகள் வேதனை: சாகுபடி பணிகளுக்காக விரைவில் வழங்க வலியுறுத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்தாண்டு (2024-25) சம்பா பருவ காலத்தில் மழையால் சேதமடைந்த நெல், பருத்தி, மிளகாய் உள்ளிட்ட பயிர்களுக்குரிய நிவாரணத்தொகை இதுவரை வழங்கப்படாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நடப்பாண்டிற்குரிய நெல் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளதால் நிவாரணத் தொகையை விரைவில் வழங்க அரசு முன்வர வேண்டும். மாவட்டத்தில் மானாவாரியாக, கண்மாய் பாசனத்தில் 1.33 லட்சம் எக்டேரில் நெல் மற்றும் 50 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் சாகுபடி நடக்கிறது. வடகிழக்கு பருவ மழையை நம்பி அக்.,ல் வயலை தயார் செய்து நெல் விதைத்தும், மிளகாய் சாகுபடியில் பலர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் 2024 நவ., முதல் டிச., வரை மழை பெய்தது. கண்மாய், ஊருணி நிரம்பி வரத்து கால்வாய்கள் பராமரிப்பின்றி ராமநாதபுரம், நயினார்கோவில், சிக்கல், முதுகுளத்துார், கடலாடி, பரமக்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் வயல் வெளியில் குளம் போல தண்ணீர் தேங்கியது. 40 ஆயிரம் எக்டேர் வரை நீரில் மூழ்கியது. இதனால் நெல், மிளகாய் விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு ரூ. பல லட்சம் இழப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக வருவாய்துறையினர், வேளாண் துறையினர் இணைந்து கணக்கெடுப்பு நடத்தினர். நிவாரணம் கேட்டு தமிழக அரசின் நிதித்துறைக்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முத்துராமு கூறியதாவது: பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கி வருகின்றனர். ஆனால் 2024 டிச., ஜன., மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் விரைவில் வந்துவிடும் என்கின்றனர். நடப்பாண்டில் சம்பா நெல் சாகுபடியில் விவசாயிகள் வயலை உழுது, நெல்விதை விதைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே பயிர் களுக்குரிய வெள்ள நிவாரணத்தை உடனடியாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை