நெற்பயிரில் நோய் பாதிப்பு : விவசாயிகள் கவலை
முதுகுளத்துார்: முதுகுளத்துார் தாலுகாவில் நெற்பயிரில் மஞ்சள் பழுப்பு நிற நோய் தாக்குதல் அதிகரிப்பால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். செல்வநாயகபுரம், கீரனுார், காக்கூர், குமாரக்குறிச்சி, ஏனாதி, பூக்குளம், தேரிருவேலி, வெண்ணீர்வாய்க்கால், சித்திரங்குடி, கீழத்துாவல், மரவெட்டி உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்கின்றனர். நடப்பு ஆண்டில் 30 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நெல் விவசாயம் செய்துள்ளனர். முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதிகளில் சில நாட்களுக்கு முன்பு மழை பெய்ததால் நெற்பயிர்கள் ஓரளவு வளரத் துவங்கியுள்ளது. நெற்பயிர்களுக்கு சமமாக களைகள் அதிகமாக வளர்ந்துள்ளது. இதனால் களைக்கொல்லி மருந்து அடித்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். களைகள் எடுக்க கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். தற்போது மஞ்சள் பழுப்பு நிற நோய் தாக்கம் ஏற்பட்டு வருவதால் ஏராளமான பயிர்கள் வீணாகிறது. விவசாயிகள் கூறியதாவது: முதுகுளத்துார் வட்டாரத்தில் நெற்பயிர்கள் ஓரளவு வளரத் தொடங்கிய நிலையில் பழுப்பு நிற நோய் தாக்கத்தால் பயிர்கள் வீணாவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். நடப்பு ஆண்டு முழுவதும் நெல் விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நோய் தாக்கத்திலிருந்து கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்க வேண்டும் என்றனர்.