உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நெல் கொள்முதல் நிலையங்களில் அடங்கல் தருமாறு அலைக்கழிப்பு விவசாயிகள் கவலை

நெல் கொள்முதல் நிலையங்களில் அடங்கல் தருமாறு அலைக்கழிப்பு விவசாயிகள் கவலை

திருவாடானை: பயிர் காப்பீட்டிற்காக பயன்படுத்திய அடங்கலையே நெல் கொள்முதல் நிலையத்திற்கும் பயன்படுத்தாமல் புதிதாக அடங்கல் வாங்குமாறு கூறி அலைக்கழிக்கப்படுவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை தாலுகாவில் இந்த ஆண்டு 26,650 எக்டேரில் சாகுபடி பணிகள் நடந்தது. கடந்த சில நாட்களாக நெல் அறுவடை பணிகள் துவங்கியது. விவசாயிகள் நலன் கருதி சின்னக்கீரமங்கலம, வெள்ளையபுரம், மங்களக்குடி, சிறுமலைக்கோட்டை ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.விவசாயிகள் நெல் மூடைகளை கொண்டு செல்லும் போது வி.ஏ.ஓ.,விடம் புதிய அடங்கலை வாங்கி வருமாறு அங்கு பணியாற்றும் அலுவலர்கள் கூறுகின்றனர். இது குறித்து கட்டிவயல் முன்னாள் ஊராட்சி தலைவர் மரியஅருள் கூறியதாவது:பயிர் காப்பீடு செய்யும் போது மூவிதழ் அடங்கல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. அதே அடங்கலை தற்போது கொடுத்தால் வாங்க மறுக்கிறார்கள். பொதுவாக வி.ஏ.ஓ.,க்களை தேடி கண்டுபிடித்து அடங்கல் வாங்குவதற்குள் பெரும் சிரமம் அடைந்தோம். இந்நிலையில் மீண்டும் அடங்கல் வாங்கச் சொல்வது வேதனை அளிக்கிறது. கடுமையான உழைப்பிற்கு பின் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொடுத்து தான் பணம் கேட்கிறோம். இலவசமாக கேட்கவில்லை. ஆனால் அலுவலர்கள் இலவசமாக பணம் வழங்குவது போல் விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர்.நான்கு இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதே தவிர இன்னமும் நெல் கொள்முதல் செய்யவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி