ஈசல் புற்று அதிகரிப்பால் மழை பெய்யும்: விவசாயிகள் கணிப்பு
திருவாடானை: திருவாடானை கிராமங்களில் ஈசல் புற்று அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு அதிக மழை பெய்வதற்கு அறிகுறியாக கருதப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். ஈசல் என்பது கரையான் வகையை சேர்ந்தது. இந்த ஈசல்கள் புற்றுகளில் இருந்து மழை காலங்களில் மட்டும் வெளியில் வரும். இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: இந்த ஈசல்கள் மழைக் காலத்தின் தட்ப வெப்பநிலையை நன்கு கணித்து புற்றுகளில் இருந்து வெளியேறுகின்றன. மழை வருவற்கான சூழல் வரும் போது இனபெருக்கத்திற்காக வானத்தை நோக்கி மேலே பறக்கும். ஈசல்கள் பறந்து கூட்டமாக சேரும் போது அவை மழை வருவதற்கான அறிகுறியாக கருதப்படுகின்றன. அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாரம் என்ற பழமொழியின் படி ஈசல்கள் கூட்டமாக பறப்பது கனமழை அல்லது அடை மழை வருவதற்கான முன்னறிவிப்பாக கருதப்படுகிறது. மழைக்கு பிறகு இருக்கும் இதமான சூழல் ஈசல்களின் இனபெருக்கத்திற்கு உகந்ததாக இருக்கும். அதன் பின் இறக்கைகளை உதிர்த்து புதிய புற்றுகளை உருவாக்கும். ஈசல்கள் ஒளியால் ஈர்க்கப்படுவதால் தெருவிளக்குகளை சுற்றி கூட்டமாக பறக்கும். வீடுகளில் நுழைந்து விளக்குகளுக்கு முன்பு பறக்கும். புற்றிலிருந்து இந்த ஈசல்களை சேகரித்து பொரி அரிசியுடன் கலந்து சிலர் சாப்பிடுவார்கள். தற்போது திருவாடானை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ஈசல்கள் புற்று அதிகமாக உள்ளது. இது மழை வருவதற்கான ஒரு இயற்கையான அறிகுறியாக கருதப்படுவதால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றனர்.