உரம் விலை பட்டியல் அறிவிப்பு
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் 26,650 எக்டேரில் நெல் சாகுபடி நடக்கிறது. வடகிழக்கு பருவமழையை நம்பி விவசாயிகள் பணி செய்து வருகின்றனர். தற்போது பயிர்கள் முளைத்து வருகின்றன. இந்நிலையில் ரசாயன உரங்களுக்கு அரசு நிர்ணயம் செய்த விலை தெரியாமல் விவசாயிகள் குழப்பம் அடைந்தனர். உரம் இருப்பு மற்றும் விலை பட்டியலை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்த செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது. அதன் எதிரொலியாக யூரியா மூடை ரூ.266.50, டி.ஏ.பி., ரூ.1350, பாக்டம்பாஸ் (20:20:.0.13) ரூ.1425, அமோனியம் சல்பேட் ரூ.985 உள்ளிட்ட பல உர வகைகள் விலை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. விற்பனையாளர்கள் உரங்களின் இருப்பு விபரம் மற்றும் விலைப் பட்டியலை விவசாயிகளுக்கு தெரியும் வண்ணம் வைக்க வேண்டும் என திருவாடானை வேளாண் அலுவலர்கள் தெரிவித்தனர்.