திருப்பாலைக்குடியில் பரவுகிறது காய்ச்சல்
ஆர்.எஸ்.மங்கலம்: திருப்பாலைக்குடி பகுதியில் வேகமாக காய்ச்சல் பரவுவதால் ஏராளமான மக்கள் பாதிப்படைந்துள்ளனர். கிழக்கு கடற்கரை சாலை, திருப்பாலைக்குடி பகுதியில் 800 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அதிகளவில் மீனவர்கள் வசிக்கும் பகுதியான இங்கு ஒரு வாரத்திற்கும் மேலாக காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தொடர் மழையால் சீதோஷ்ண நிலை மாறியது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொடர் காய்ச்சலால் பாதிப்படைந்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திருப்பாலைக்குடி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சையளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.