தீ தொண்டு நாள் விழா உயிர் நீத்தாருக்கு அஞ்சலி
பரமக்குடி: -பரமக்குடியில் ஏப்.,14 துவங்கி 20ம் தேதி வரை 7 நாட்கள் தீ தொண்டு வார விழா நடக்கிறது. உயிர் நீத்தாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.பரமக்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் தீ தொண்டு வார முதல் நாளில் உயிர் நீத்தாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மும்பை கப்பல் தளத்தில் 1944ம் ஆண்டு ஏற்பட்ட வெடி விபத்தில் பல நூறு மக்களுடன் 66 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் போது எதிர்பாராத வகையில் 33 வீரர்கள் இறந்துள்ளனர்.இவர்கள் அனைவருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில், இந்தியா முழுவதும் தீ தொண்டு நாளின் முதல் நாளில் உயிர் நீத்தாருக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடக்கிறது. பரமக்குடியில் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமை வகித்து உயிர் நீத்தாருக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.சிறப்பு நிலை அலுவலர் அப்பாதுரை, சிறப்பு நிலை அலுவலர் (போக்குவரத்து) மாடசாமி, பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். எந்த வகையான தீ விபத்தின் போதும் அனைவரையும் காப்பாற்றும் வலிமை வேண்டும்.சுற்றி உள்ளவர்களின் உடைமைகளையும், உயிர்களையும் காப்பாற்றும் திறனை தர வேண்டும். தொடர்ந்து மீட்பு பணியில் அசம்பாவிதம் நிகழும் சூழலில் எனது குடும்பத்தாரை காக்கும் வல்லமையை இறைவன் தர வேண்டும், என உறுதிமொழி எடுத்தனர்.