ராமேஸ்வரத்தில் மீன்களுக்கு தட்டுப்பாடு: விலை உயர்வு
ராமேஸ்வரம்:பொங்கல் பண்டிகை, சூறாவளியால் ராமேஸ்வரத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விலையும் உயர்ந்தது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் ஜன.13ல் மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தினர். இதனைத்தொடர்ந்து ஜன.15ல் ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் மீனவர்கள் தொடர்ந்து 5 நாட்கள் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளில் முடங்கினர்.இதனால் ராமேஸ்வரத்தில் மீனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் தனுஷ்கோடி கடலில் பாரம்பரிய கரைவலையில் சிக்கிய மீன்களும் போதுமானதாக இல்லை. இதனால் நேற்று ராமேஸ்வரம் மீன் மார்க்கெட்டில் ஒரு கிலோ நகரை மீன், வெளமீன் ரூ.400 (பழைய விலை ரூ.300), சூடை மீன் ரூ.100 (பழைய விலை ரூ.80) விற்றதால் அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.சபரிமலை ஐயப்பன் சீசன், மார்கழி மாதம் பூஜைகள் முடிந்ததால் பலரும் அசைவ உணவுக்கு மாறியதால் ஆடு, கோழி மற்றும் மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.