உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ரூ.60 கோடியில் பாம்பனில் துாண்டில் வளைவு பாலம் கட்டும் பணிக்கு மீனவர்கள் எதிர்ப்பு

ரூ.60 கோடியில் பாம்பனில் துாண்டில் வளைவு பாலம் கட்டும் பணிக்கு மீனவர்கள் எதிர்ப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடற்கரையில் தமிழக அரசு ரூ.60 கோடியில் கட்டும் துாண்டில் வளைவு பாலத்திற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இயற்கை சீற்றத்தில் இருந்து படகுகளை பாதுகாக்க பாம்பன் லைட்ஹவுஸ் கடற்கரையில் ரூ.60 கோடியில் தமிழக அரசு துாண்டில் வளைவு பாலம் அமைக்கிறது. இந்த பாலம் பாம்பன் ரயில்வே தண்டவாளத்தில் இருந்து 595 மீ., மற்றும் லைட்ஹவுஸ் கடற்கரையில் இருந்து 690 மீ., நீளத்தில் அமைகிறது. இப்பணி முடிந்ததும் புயல் காலத்தில் 200 படகுகளை மட்டுமே இதனுள் நிறுத்த முடியும். ஆனால் பாம்பனில் 95 விசைப்படகுகள், 200க்கு மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ள நிலையில் புதிய துாண்டில் வளைவு பாலம் போதுமான இடவசதி இல்லை என பால பணிகளை பார்வையிட வந்த பொறியாளர்களிடம் மீனவர்கள் முறை யிட்டனர். இதுகுறித்து பாம்பன் மீனவர் தொத்திரியாஸ் கூறியதாவது: துாண்டில் வளைவு பாலம் பணி முடிந்ததும் இங்கு 200க்கும் குறைவான படகுகளை மட்டுமே நிறுத்த முடியும். ஆகையால் பாம்பன் ரயில் பாலம் அருகில் இருந்து துவங்கும் பாலத்தை 20 மீ., அகலப்படுத்தி கட்டினால் கூடுதல் படகுகள் நிறுத்த முடியும். ஆனால் மீன்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதனால் பாலத்தால் மீனவர்களுக்கு பயனில்லை என்றார். இதுகுறித்து மீன்துறை பாலம் கட்டுமான அதிகாரி ஒருவர் கூறுகையில், சென்னை ஐ.ஐ.டி., கொடுத்த அறிக்கையின் படி நிர்ணயித்த அளவில் துாண்டில் வளைவு பாலம் கட்டப்படுகிறது. இதனுள் 200க்கும் மேற்பட்ட படகுகளை நிறுத்த முடியும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !