| ADDED : நவ 12, 2024 11:40 PM
ராமேஸ்வரம் ; இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் , படகுகளை விடுவிக்க தவறியதாக மத்திய அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் மீனவர்கள் முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திடீரென பெண்கள் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர்.இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கவும், மீனவர்களை விடுவிக்கத் தவறியதாக மத்திய அரசை கண்டித்தும், நேற்று காலை 9:30 மணிக்கு பாம்பன் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான மீனவர்கள், மீனவ பெண்கள் குவிந்தனர்.அவர்கள் தடுப்பு வேலியை தாண்டி பாம்பன் பாலத்திற்குள் செல்ல முயன்றனர். இதனால் போலீசார்- மீனவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின் தடையை தாண்டி பாலத்தின் நுழைவுப்பகுதியில் அமர்ந்து மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.எஸ்.பி., சந்தீஷ் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர். மறியலால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்ற ஏராளமான பக்தர்களின் வாகனங்கள், அரசு பஸ்கள் பாம்பன் பாலத்தின் இருபுறமும் நீண்ட துாரம் வரை நிறுத்தப்பட்டன. பெண்கள் தற்கொலை முயற்சி
இலங்கைச் சிறையில் உள்ள பாம்பன் நாட்டுப்படகு மீனவர்களின் குடும்ப பெண்கள் சிலர் எஸ்.பி., சமரசம் செய்தும் உடன்படாமல் பாலத்தில் இருந்து கீழே கடலில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்களை பெண் போலீசார் தடுத்து சமாதானப்படுத்தி அழைத்து வந்தனர்.