நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த மீனவர்கள் மீட்பு
திருப்புல்லாணி:படகு கவிழ்ந்து, 5 மணி நேரம் கடலில் தத்தளித்த மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகே களிமண்குண்டு ஊராட்சி வேலாயுதபுரம் மன்னார் வளைகுடா கடற்கரையில், 200க்கும் அதிகமான நாட்டு படகு மற்றும் பைபர் படகுகள் உள்ளன. வேலாயுதபுரத்தை சேர்ந்த களஞ்சிய முருகன், 40, சின்னத்துரை, 45, முருகன், 35, ஆகிய மூன்று மீனவர்கள் பைபர் படகில் வாளைத்தீவு அருகே நேற்று அதிகாலை, 3:30 மணிக்கு, மீன் பிடித்த போது, படகு கவிழ்ந்தது. மீனவர்கள் மூவரும், மிதக்கும் தன்மை கொண்ட பைபர் படகின் பக்கவாட்டு பகுதிகளை பிடித்தவாறு தத்தளித்துக் கொண்டிருந்தனர். காலை, 8:30 மணிக்கு அவ்வழியாக மற்றொரு படகில் வந்த உரிமையாளர் முனீஸ்வரன் மற்றும் நான்கு மீனவர்கள், தத்தளித்த மீனவர்களையும், படகையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஜி.பி.எஸ்., கருவி, வலை, இன்ஜின் உள்ளிட்ட 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் நீரில் மூழ்கின. கீழக்கரை வருவாய் துறை மற்றும் மீன்வளத் துறையினர் விசாரிக்கின்றனர்.