இலங்கையில் அபராதம் செலுத்தி ராமேஸ்வரம் திரும்பிய மீனவர்கள்
ராமேஸ்வரம்:இலங்கை நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திய ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் உள்ளிட்ட 20 பேர் நேற்று விமானம் மூலம் சென்னை வந்திறங்கினர். ஜூன், ஜூலையில் ராமேஸ்வரம், பாம்பனில் இருந்து இரு விசைப்படகுகள், ஒரு நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்ற 20 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா, புத்தளம் சிறையில் அடைத்தனர். இதில் புத்தளம் சிறையில் இருந்த பாம்பன் மீனவர்கள் 9 பேருக்கு தலா ரூ.3.25 கோடி அபராதம் விதித்ததால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் நீதிபதியிடம் கதறி அழுது மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து 9 பேரையும் எச்சரித்து நீதிபதி விடுதலை செய்தார். மீதமுள்ள 11 மீனவர்களின் வழக்கை விசாரித்த மன்னார் நீதிபதி தலா ரூ. 5 லட்சம் ( இந்திய மதிப்பில் ரூ.93 ஆயிரம்) அபராதம் விதித்தார். இதையடுத்து தலா ரூ.93 ஆயிரம் வீதம் ரூ. 10.23 லட்சத்தை உறவினர்கள் ஏற்பாட்டில் இலங்கை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது. இதையடுத்து 20 மீனவர்களும் கொழும்பில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை சென்னை வந்தனர். இவர்களை ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரிகள் அழைத்து வந்து தங்கச்சிமடம், பாம்பனில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.