குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. மழைநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சேதுபதி நகர் குடியிருப்போர் நல சங்க பொருளாளர் அன்புசெல்வன் கூறியதாவது: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சேதுபதி நகர் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால் மக்கள் சாலையில் நடக்க கூட முடியவில்லை. சமீபத்தில் மழைக்கால அவசர தேவைக்கு 1077 என்ற உதவி எண்ணை அழைக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. அந்த எண்ணிற்கு அழைத்து புகார் தெரிவித்தால் தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேரில் சென்று கேட்டால் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகத்தில் தெரிவித்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால் மழைநீர் அகற்றப்படாமல் ஒரு வாரமாக குளம் போல் தேங்கியுள்ளது. நாளுக்கு நாள் மழை அதிகரிப்பதால் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து குடியிருப்புக்குள் வருகிறது. இதனால் அங்கு வசிப்போருக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. இரவு நேரங்களில் விஷ ஜந்துக்கள் வருகின்றன. அப்பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற தற்காலிக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் குடிநீர் பாதிக்கப்படாமல் இருக்கும் என்றார். ---