கள்ளக்காதல் தகராறு: வாலிபர் கொலை
திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளையில் கள்ளக்காதல் தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தடுக்க வந்த தாய்க்கும் வெட்டு விழுந்தது. ஒன்பது பேரை போலீசார் தேடுகின்றனர்.பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார் 29, சரவணன் 45. முத்துக்குமாருக்கு திருமணம் ஆகவில்லை. இருவரும் திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் பல்வேறு ஊர்களுக்குச் சென்று சிறுவர்கள் விளையாட்டு ராட்டினம் மற்றும் விளையாட்டு சாதனங்கள் அமைத்து தொழில் செய்வது வழக்கம்.தீபாவளியை முன்னிட்டு தொண்டி அருகே நம்புதாளையில் முத்துக்குமாரும், தொண்டி மகாசக்திபுரத்தில் சரவணனும் ராட்டினம் அமைத்திருந்தனர். சரவணன் சகோதரி யசோதை 35. இவர் கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார்.இந்நிலையில் யசோதைக்கும், முத்துக்குமாருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.கள்ளக்காதலை கைவிடக் கோரி சரவணன், முத்துக்குமாரிடம் பலமுறை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்தது.இந்நிலையில் நேற்று மதியம் 3:00 மணிக்கு சரவணன் உட்பட ஒன்பது பேர் கும்பல் கார் மற்றும் டூவீலர்களில் சென்று முத்துக்குமாரை ராட்டினம் அமைத்திருந்த பகுதியில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. தடுக்க வந்த தாய் சுசீலாவை வெட்டியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இச் சம்பவம் தொடர்பாக திருவாடானை டி.எஸ்.பி., சீனிவாசன், தொண்டி இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் சரவணன், சுந்தரவேல், ராஜா, யசோதை, பாஸ்கர், கர்ணன், பகவதி, அஜீத், பாலா ஆகிய ஒன்பது பேரை தேடி வருகின்றனர்.