பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி மையம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் ஐ.ஐ. எப்.எல்., சமஸ்தா, வாப்ஸ் நிறுவனம் இணைந்து பெண்களுக்கான இலவச தொழிற்பயிற்சி மையத்தை நேற்று துவங்கினர்.ராமநாதபுரம் வாப்ஸ் திட்ட இயக்குநர் நாராயணன் கூறியதாவது: மதுரை, சிவகங்கை, பரமக்குடி பகுதிகளில் பெண்களுக்கு இலவச தொழிற்பயிற்சி வழங்கி வருகிறோம். தற்போது ராமநாதபுரத்தில் புதிய பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது.இதில் பெண்களுக்கு தையல், ஆரி, எம்ராய்டரி பயிற்சி, சிறுதானிய உணவுகள் தயாரிப்பது, சணல், துணி பைகள் தயாரிப்பது, பனை ஓலை பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. மாதந்தோறும் 40 முதல் 50 பெண்களுக்கு சான்றிதழுடன் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் 5ம் வகுப்பு படித்த 19 முதல் 50 வயதுள்ள பெண்கள் கலந்து கொள்ளலாம். முதற்கட்டமாக 40 பெண்களுக்கு ஆரி, எம்ராய்டரி பயிற்சி அளிக்கப்படுகிறது.பயிற்சி பெற விரும்புவோர் 88702 11273, 93459 42377 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார். ராமநாதபுரம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரிபுரசுந்தரி, சமஸ்தா நிறுவன மண்டல மேலாளர் சதீஷ்குமார், வாப்ஸ் செயலாளர் அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.