பரமக்குடி வைகை பள்ளத்தில் நீர் நிரப்பி விநாயகர் சிலைகள் கரைப்பு மணலை பாதுகாக்க வலியுறுத்தல்
பரமக்குடி: பரமக்குடி ஹிந்து முன்னணி சார்பில் நடந்த விநாயகர் ஊர்வலத்தின் நிறைவில் வைகை ஆற்றில் தண்ணீரின்றி வண்டி நீரை விலைக்கு வாங்கி கரைக்கும் சூழல் இருந்தது. வற்றாத ஜீவநதியாக இருந்த வைகை ஆறு தன்நிலை இழந்துள்ளது. இதன்படி கழிவு நீர் கலப்பு, சீமைக்கருவேல மரங்கள், நாணல்கள் அடர்ந்துள்ளது. இந்நிலையில் அரசு அமைத்த மணல் குவாரிகளில் விதியை மீறி அள்ளப்பட்ட சூழலில் தொடர்ந்து மணல் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. இதனால் நகரில் நீர் ஊற்று 200 அடிக்கு மேல் சென்றுள்ளது. இதே போல் வைகை ஆற்றில் முன்பு ஊற்று நீரை குடங்களில் பெண்கள் நிரப்பிய சூழல் இருந்தது. தற்போது 30 அடி ஆழத்திற்கும் மேலும் தண்ணீர் கிடைக்காத சூழல் உள்ளது. இச்சூழலில் வைகை ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்க பள்ளம் தோண்டிய நிலையில் நீர் ஊற்று கிடைக்கவில்லை. இதன் காரணமாக வண்டி நீரை வாகனங்களில் கொண்டு வந்து ஊற்றி சிலைகளை கரைக்கும் நிலை ஏற்பட்டது. ஆகவே வருங்காலத்தில் தண்ணீரின் அவசியம் கருதி மணல் கொள்ளையை தடுப்பதுடன், ஆங்காங்கே சிறிய அளவிலான தடுப்புகளை அமைத்து நீர் ஊற்றுக்கு வழிவகை செய்ய பொதுப்பணித்துறை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.