மழைக்கு ஒழுகும் அரசு பஸ்கள் விளம்பரங்களுக்கு முக்கியத்துவம்
கீழக்கரை: கீழக்கரை, திருப்புல்லாணி, ரெகுநாதபுரம், பெரியபட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களுக்கு செல்லக்கூடிய அரசு பழைய டவுன் பஸ்களில் மழைக்காலங்களில் பயணிகள் சிரமத்துடன் பயணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் மழையால் பழைய டவுன் பஸ்களின் கூரையில் விரிசல் ஏற்பட்டும், அவற்றிலிருந்தும் தண்ணீர் ஒழுகுகிறது. அதே போன்று பக்கவாட்டில் உள்ள ஜன்னல் கண்ணாடிகள் மூட முடியாத அளவிற்கு மழையின் தாக்கம் பயணிகளின் மீது அடிக்கடி படுகிறது. பயணிகள் கூறியதாவது: பழைய அரசு டவுன் பஸ்களில் பயணிக்கும் போது குடையுடன் அல்லது மழைக்கோர்ட் அணிந்து கொண்டு செல்ல வேண்டி உள்ளது. அரசு டவுன் பஸ்சின் பக்கவாட்டு இரு பகுதிகளிலும் தனியார் விளம்பர ஸ்டிக்கர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பஸ்களின் பராமரிப்பு பணிகளை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சில இடங்களில் பஸ்களின் டயர் பஞ்சர் உள்ளிட்ட பழுதால் நடுவிலும் நின்று விடுகிறது. எனவே உரிய அளவில் மராமத்து பணிகளை செய்யவும், பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி அரசு பஸ் போக்குவரத்து துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர்.