பரமக்குடி பகுதிகளில் அரசு கேபிள் ஒயர்கள் துண்டிப்பு
நயினார்கோவில்: பரமக்குடி, நயினார்கோவில், சத்திரக்குடி பகுதிகளில் அரசு கேபிள் ஒயர்கள் துண்டிக்கப்படுவதுடன், இரும்பு கம்பங்களையும் திருடிச் செல்வது அதிகரித்துள்ளது. அரசு கேபிள் விநியோகிப்பாளர்கள் புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர். பரமக்குடியில் இருந்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு டிஜிட்டல் சிக்னல் டிஸ்ட்ரிபியூட்டர் வாயிலாக தாலுகா முழுவதும் ஒளிபரப்பப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக நயினார்கோவில் ஒன்றியம் அண்டக்குடி, பாண்டியூர் மஞ்சக்கொல்லை, போகலுார் ஒன்றியம் முத்துவயல், சத்திரக்குடி, பரமக்குடி ஒன்றியம் பார்த்திபனுார், கமுதக்குடி ஆகிய பகுதிகளில் ஆப்டிகல் பைபர் ஒயர்கள் செல்கிறது. இந்நிலையில் சில மாதங்களாக அண்டக்குடி, நயினார்கோவில், முத்துவயல், கமுதக்குடி பகுதிகளில் ஒயர்களை தாங்கி செல்லும் இரும்பு பைப்புகளை சமூக விரோதிகள் அறுத்து திருடி சென்றுள்ளனர். மேலும் பரமக்குடி ஐந்து முனை ரோடு பகுதிகளில் ஒயர்களை துண்டிப்பதுடன், கேபிள் ஒளிபரப்பை தடை செய்யும் வகையில் ஆங்காங்கே உள்ள பாக்ஸ்களை உடைத்து வருகின்றனர். இதுகுறித்து நயினார்கோவில், சத்திரக்குடி போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளின் அடிப்படையில் ஒயர் மற்றும் இரும்புக் கம்பங்களை திருடும், சேதப்படுத்தும் நபர்களை தேடி வருகின்றனர். இதனால் அவ்வப்போது அரசு கேபிள் சேவை தடைபடுவதாக டிஸ்ட்ரிபியூட்டர்கள் தெரிவித்தனர்.