ராமநாதபுரத்தில் அரசு டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
ராமநாதபுரம் ; டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்கினர். சென்னை கிண்டியில் உள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் பணியில் இருக்கும் பாதுகாப்பு கோரி கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அவசர சிகிச்சையை தவிர்த்த அனைத்து சிகிச்சைகளையும் டாக்டர்கள் புறக்கணித்துள்ளனர். அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் மலையரசு, செயலாளர்கள் டாக்டர்கள் முத்தரசு, சிவக்குமார், சுகந்தி போஸ், பொருளாளர் டாக்டர் கிருபாகரன், துணைத்தலைவர் மனோஜ்குமார், இணை செயலாளர்கள் அறிவழகன், சீனிவாசன், பாலசுப்பிரமணியன், ஜாகிர்உசேன், ஜெகதீசன், சுரேந்திரன், ரமேஷ்பாபு ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.டாக்டர் மலையரசு கூறியதாவது: அரசு டாக்டர்கள் பணியில் இருக்கும் போது பாதுகாப்பற்ற நிலை உள்ளது. யார் தாக்குவார்கள் என்ற மன நிலையில் நெருக்கடியில் பணிபுரிந்து வருகிறோம். கிண்டியில் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தியதை கண்டித்து அனைத்து சிகிச்சைகளையும் டாக்டர்கள் புறக்கணித்து வருகிறோம். மகப்பேறு, அவசர சிகிச்சைகள் மட்டுமே செயல்படும். மற்ற சேவைகளை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.