அரசு மருத்துவமனை தீ விபத்திற்கு பேட்டரிகள் வெடித்ததே காரணம்
ராமநாதபுரம்:ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீவிபத்திற்கு பேட்டரிகள் வெடித்ததே காரணம் என தெரியவந்துள்ளது.ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் 5 தளங்கள்உள்ளன. இதில் 2வது தளத்தில் நேற்று முன்தினம் இரவு 11:15 மணிக்கு இன்வர்ட்டர் பேட்டரிகள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.அனைத்து தளங்களிலும் கரும்புகை பரவியதால் நோயாளிகள் கூச்சலிட்டபடி வெளியே ஓடினர். உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழ் தளத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ் மீட்பு பணிகளை விரைவுபடுத்தினர். நேற்று மருத்துவமனை அனைத்து வார்டுகளிலும் துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. நோயாளிகள் வார்டுகளில் மாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இம் மருத்துவமனை திறக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆகிறது. பேட்டரி, ஜெனரேட்டர் அறையில் காற்றோட்டம் இல்லை. இதனால் வெப்பம் அதிகமாகி வெடித்துள்ளன.டீன் அமுதா ராணி கூறுகையில், மின் கசிவு ஏற்பட்ட இடம் அருகே நோயாளிகள் பிரிவு இல்லை. புகையால் உயிர் சேதமோ, மூச்சுத்திணறலோ வேறு எந்த உபாதைகளோ ஏற்படவில்லை. மேலும் விபத்திற்கும் அவசர சிகிச்சை பிரிவு மையத்திற்கும் தொடர்பு இல்லை. அங்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தடையின்றி மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது என்றார்.