உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / செவிலியர்கள் ஒப்பந்த முறையில் நியமனம் செய்வதை அரசு கைவிட வலியுறுத்தல்

செவிலியர்கள் ஒப்பந்த முறையில் நியமனம் செய்வதை அரசு கைவிட வலியுறுத்தல்

ராமநாதபுரம் : தமிழகத்தில் சுகாதாரத்துறையில் செவிலியர்கள், மருத்துவ ஊழியர்களை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதை கைவிட வேண்டும், என தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில பொது செயலாளர் சுபின் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 4000 காலிப்பணியிடங்களை மாவட்ட நல் வாழ்வு சங்கங்கள் மூலம் 11 மாத தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த தமிழ்நாட்டிற்கான தேசிய நல்வாழ்வு குழுமத்தின் திட்ட இயக்குநர் ஜூலை 3ல் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் சுகாதார அமைப்பினை நிரந்தர தன்மையற்றதாகவும், தரமற்றதாகவும் மாற்றும் அபாயத்தை இந்த அறிவிப்பு உருவாக்கியுள்ளது.சுகாதார திட்டங்களை தரமாக மக்களுக்கு வழங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.மருத்துவத்துறை அரசின் வசம் இருப்பதால் தான் கொரோனா தொற்று பரவிய போது அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை வழங்கி பல உயிர்களை அரசு காப்பாற்றியது.இந்நிலையில், அத்தியாவசிய துறையை நிரந்தர தன்மையற்றதாக மாற்ற முயற்சிக்கும் அரசின் இந்த அறிவிப்பு மருத்துவத்துறையை தனியார் மயத்தை நோக்கி செல்லும் ஆபத்தை ஏற்படுத்தும்.படித்த இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவை தகர்க்கும் விதமாக உள்ளது.கொரோனா சிகிச்சையின் போது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் பணியமர்த்தப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களில் 700 பேருக்கு மீண்டும் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர்களுக்கு பணி வழங்காமல் மாவட்ட நலச்சங்கங்கள் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்புவது அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசு இந்த முடிவை கைவிட்டு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்களை பணியமர்த்தி மருத்துவத்துறையின் நிரந்தரதன்மையை உறுதிப்படுத்த வேண்டும், என அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !