உப்பளங்களில் ஜிப்சம் வெட்டி எடுப்பு
தேவிபட்டினம் : ராமநாதபுரம் அருகே உப்பளங்களில் வெட்டி எடுக்கப்படும் ஜிப்சம் விவசாய பயன்பாட்டிற்கு வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் நீண்ட கடற்கரை அமைந்துள்ளது. இந்தப் பகுதிகளை ஒட்டி அதிகளவில் உப்பளங்கள் அமைக்கப்பட்டு அதில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக மாவட்டத்தில் தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, கோப்பேரிமடம், நதிப்பாலம், வாலிநோக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.கடந்த மூன்று மாதங்களாக சீதோஷ்ண நிலை காரணமாக உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், உப்பள பாத்திகளை சீரமைக்கும் விதமாக உப்பள பாத்திகளில் படிந்துள்ள ஜிப்சத்தை வெட்டி எடுத்து பல்வேறு பயன்பாட்டிற்காக அனுப்பப்படுகிறது.ஜிப்சம் ஒரு உலோகம் அல்லாத இயற்கை கனிமம். இது உப்பள பாத்திகளில் மழைநீர் தேங்கியதால் பாத்திகளில் ஜிப்சம் படிவுகள் படிகின்றன. இவை நிறமற்றதாகவோ அல்லது வெண்மையாகவோ இருக்கும். அசுத்தங்கள் இருக்கும் பட்சத்தில் பல்வேறு நிறங்களில் காட்சியளிக்கும்.ஆனால் நச்சுத்தன்மை அற்றவை. இவை விவசாயத்தில் அமிலத்தன்மை உள்ள மண்ணை மேம்படுத்துதல், கந்தகம் மற்றும் கால்சியத்தை அதிகப்படுத்தி தாவரங்களுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பயன்களை விவசாய பயிர்களுக்கு அளிக்கின்றன.மேலும் விவசாயம் மட்டுமின்றி குளங்கள், குட்டைகளில் நீர்வாழ் உயிரினங்களின் வளர்ச்சிக்கும், எலும்பியல் மற்றும் அறுவை சிகிச்சையிலும் முக்கிய பங்காற்றுகின்றன. இதனால், ஜிப்சத்திற்கு வெளி மாநிலங்களில் அதிக வரவேற்பு உள்ளது.தற்போது ராமநாதபுரத்தில் வெட்டி எடுக்கப்படும் ஜிப்சம் வெளி மாநிலங்களில் தொழிற்சாலைகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பப்படுகின்றன.