சோமநாதபுரம் காலனியில் சுகாதாரக்கேடு
பரமக்குடி : பரமக்குடி அருகே சோமநாதபுரம் காலனியில் கண்டபடி கொட்டப்படும் குப்பையால் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரக் கேடால் மக்கள் சிரமப்படுகின்றனர். நீர்நிலைகளும் அசுத்தமாகியுள்ளன.பரமக்குடி ஒன்றியம் தெளிச்சாத்தநல்லுார் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சோமநாதபுரம் உள்ளது. இதனை ஒட்டிய பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் பெருகி உள்ளன. இப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக நெசவாளர்கள் காலனி வீடுகளை அமைத்து தொழில் செய்கின்றனர். இந்நிலையில் ஒட்டுமொத்த காலனி பகுதி, ரோட்டோரம் இரு புறங்களிலும் குப்பைமேடு காணப்படுகிறது.மதுரை, பரமக்குடி ரோட்டிலும் குப்பை கொட்டி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வலது பிரதான கால்வாய் இப்பகுதியில் செல்லும் நிலையில் அங்கும் கால்வாயில் குப்பை கொட்டுகின்றனர்.இதனால் ஒட்டுமொத்த ஊராட்சி பகுதியில் குப்பை கூளங்களுக்கு மத்தியில் சுகாதாரக் கேடாக காணப்படுகிறது. நெசவாளர்கள் வீடுகளில் அதிக அளவில் பூச்சிகள் புகுவதால் நுால் தறிக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது.ஒரு சில பள்ளமான பகுதியில் மழை நீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. எனவே தெளிச்சாத்தநல்லுார் ஊராட்சி பகுதியை சீர் செய்ய யூனியன் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.