மேலும் செய்திகள்
மிளகாய் செடியுடன் முறையிட்ட விவசாயிகள்
29-Mar-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் நெற்பயிருக்கு அடுத்தப்படியாக அதிகளவில் சம்பா மிளகாய், குண்டு மிளகாய் ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக கமுதி, முதுகுளத்துாரில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதால் அப்பகுதியில் தோட்டக்கலைத்துறை மிளகாய் நாற்றுப் பண்ணை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தினர். திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, கமுதி, முதுகுளத்துார், திருவாடானை, கீழக்கரை, சிக்கல், ஆர்.எஸ். மங்கலம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் ஏக்கரில் சம்பா, குண்டு மிளகாய் சாகுபடி நடக்கிறது. குண்டு மிளகாய் வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.பணப்பயிர் என்பதாலும், நல்ல மகசூல் கிடைப்பதாலும் ஆண்டுதோறும் 500 ஏக்கர் வரை மிளகாய் சாகுபடி அதிகரித்து வருகிறது. குறிப்பாக கமுதி, முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கரில் மிளகாய் சாகுபடி நடக்கிறது. ஆனால் மிளகாய் நாற்றுகளை வெளியூர்களில் இருந்து விவசாயிகள் வாங்குகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு மாவட்ட செயலாளர் எஸ்.முத்துராமலிங்கம் கூறுகையில், தோட்டக்கலைத்துறை சார்பில் பழங்கள், மரக்கன்றுகள் வளர்க்கும் பண்ணை அமைத்துள்ளனர். ஆனால் மிளகாய் நாற்றுபண்ணை இல்லை. வெளியூர்களில் வாங்கும் மிளகாய் நாற்றுகள் ஆரோக்கியமானதாக இருப்பது இல்லை. அதே சமயம் உள்ளூரில் மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு வெப்பநிலையை தாங்கும் மிளகாய் நாற்றுகளை உற்பத்தி செய்தால் மகசூல் அதிகரிக்கும். எனவே அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யும் கமுதி, முதுகுளத்துார் உள்ளிட்ட இடங்களில் மிளகாய் நாற்றுப்பண்ணை அமைக்க தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்றார்.
29-Mar-2025