மதுரை பாசஞ்சர் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரியுங்கள்: பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் கோரிக்கை
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலில்களில் பயணிகள் அதிகரிப்பதால் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர். ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு பாசஞ்சர் ரயில் காலை 5:45 மணி, 11:40, மாலை 6:15 மணி ஆகிய நேரங்களில் இயக்கப்படுகின்றன. அதே போல் மதுரையில் இருந்து காலை 6:50, மதியம் 1:50, மாலை 6:15 மணிக்கு ராமேஸ்வரத்திற்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த ரயில்களில் குறைந்த கட்டணத்தில் விரைவாக இயக்கப்படுவதால் பயணிகள் அதிகளவில் பயணிக்கின்றனர். தற்போது ராமேஸ்வரம்- -மதுரை பாசஞ்சர் ரயிலில் 10 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. அதில் கடைசியில் மகளிர் பெட்டியும் பாதி மாற்றுத்திறனாளிகள் பெட்டியுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் பெட்டி மகளிர் பெட்டியும், சரக்கு கையாள்வதற்காக பாதி பெட்டியும் அமைக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்படுவதால் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம், பரமக்குடி பகுதிகளில் பயணிகள் ரயில்களில் நின்று கொண்டே பயணிக்கும் நிலை உள்ளது. எனவே பயணிகளின் நலன் கருதி ரயில்வே நிர்வாகம் இந்த பாசஞ்சர் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்.இவற்றில் 22 பெட்டிகள் வரை இணைக்க முடியும். எனவே தற்போது உள்ள 10 பெட்டிகளுடன் 5 பெட்டிகளாவது கூடுதலாக இணைக்க வேண்டும் என ரயில் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.