உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மழையால் பாதித்த நெற்பயிரை பாதுகாப்பதற்கு அறிவுறுத்தல்

மழையால் பாதித்த நெற்பயிரை பாதுகாப்பதற்கு அறிவுறுத்தல்

ராமநாதபுரம்: வடகிழக்கு பருவமழையால் ராமநாதபுரத்தில் உள்ள பல கிராமங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் முழ்கியுள்ளதால் அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து திருப்புல்லாணி வேளாண் உதவி இயக்குநர் செல்வம் கூறியதாவது: விவசாயிகள் தங்களது வயலில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைக்க வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும். இளம்பயிர்கள் அதிக நாள் நீரில் முழ்கி இருந்தால் தழைச்சத்து, துத்தநாகசத்து குறைபாடு ஏற்பட்டு இளம் மஞ்சள் நிறமாக மாறும். அவ்வாறு மாறினால் தண்ணீர் வடிந்தவுடன் 2 கிலோ யூரியா, ஒரு கிலோ துத்தநாக சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் இலைவழி தெளிப்பு செய்ய வேண்டும். பயிர் தண்டு உருளும் பருவம், பூக்கும் பருவத்தில் தண்ணீர் தேங்கினால் 4 கிலோ டி.ஏ.பி., உரத்தை 10 லிட்டர் நீரில் கரைத்து மறுநாள் வடிகட்டி அதனுடன் 2 கிலோ யூரியாவை 190 லிட்டர் நீரில் கலந்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும். தண்ணீர் தேக்கத்தால் பயிர் வளர்ச்சிக் குன்றி காணப்பட்டால் தண்ணீர் வடிந்தவுடன் ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன் ஜிப்சம் 18 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 4 கிலோ ஆகியவற்றை கலந்து ஒரு நாள் இரவு வைத்த பின் 17 கிலோ பொட்டாஷ் கலந்து மேலுரமாக இட வேண்டும். மேலும் அதிக நாள் தண்ணீரில் முழ்கியுள்ள நெற்பயிர்களில் குருத்துப்பூச்சி, இலைசுருட்டுப்புழு, பச்சைத்தத்துப் பூச்சி, குலை நோய், இலை உறை கருகல் நோய் உள்ளிட்ட பூச்சி நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தகுந்த பூச்சிநோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இளம் பயிர்கள் அழுகிய நிலை ஏற்பட்டால் இருப்பில் உள்ள நாற்றுகளை கொண்டு இடை நடவு செய்ய வேண்டும். அதிக குத்துகள் உள்ள பயிரை கலைத்து பயிர் இல்லாத இடங்களில் நடவு செய்யலாம். விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு உடனடியாக பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை