கிராமப்புற நுாலகங்களில் வாசகர் வருகையின்றி காற்று வாங்குது விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்
திருப்புல்லாணி: திருப்புல்லாணி, மண்டபம், சாயல்குடி, கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருவாரியான கிராமப்புற நுாலகங்களில் வாசகர்களின் வருகை இல்லாததால் காற்று வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வாசகர்களிடம் வாசிப்பை ஊக்குவிப்பதற்காக பொது அறிவு நுால்கள், நாளிதழ்கள் உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த நுால்களும் கிராமப்புற நுாலகத்தில் உள்ளன. ராமநாதபுரம் மாவட்ட தலைமை நுாலகத்தை மையமாக கொண்டு இயங்கும் கிராமப்புற கிளை நுாலகங்களில் 2020ல் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பெருவாரியாக வாசகர்களின் வரத்து குறைந்துள்ளது. திருப்புல்லாணியைச் சேர்ந்த வாசகர்கள் கூறியதாவது:மாவட்டத்தின் ஒன்றிய கிராமங்களில் உள்ள கிளை நுாலகங்களில் முன்பு வாசகர்கள் வருகை அதிகரித்து வந்தது. தற்போது பொதுமக்கள் விரும்பி படிக்கக்கூடிய நாளிதழ்கள் ஏதும் வைக்கப்படாமல் அரசியல் கட்சி தலைமை அறிவுறுத்திய நாளிதழ்களை பயன்படுத்துகின்றனர்.தற்போது அலைபேசியின் மூலம் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களின் மூலமாக தேவைப்படும் புத்தகங்களை பதிவிறக்கம் செய்தும் வாசகர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க கிராமப்புற நுாலகங்களில் வாசகர்கள் மற்றும் பொதுமக்களை கவர வாசகர் வட்டம் என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.பொது அறிவு சார்ந்த வாசிப்பை ஊக்குவிக்க அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். காலை 9:30 முதல் மாலை 5.45 மணி வரை பெயரளவிற்கு காட்சி பொருளாக இயங்கும் நுாலகத்தை சீர்படுத்தும் நடவடிக்கையை நுாலக துறையினர், தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்றனர்.