ரோஜ்மா நகரில் முறையாக ஜல்ஜீவன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் ஏற்கனவே உள்ள குழாயில் பதிப்பதாக புகார்
சாயல்குடி: சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரோஜ்மா நகரில் ஜல்ஜீவன் திட்டம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டு இத்திட்டத்திற்கான பணிகள் நடக்கிறது.ரோஜ்மா நகரில் 500க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்நிலையில் கன்னிராஜபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரு குழாய்கள் மற்றும் வீடுகளில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் ஜல்ஜீவன் திட்டத்திற்காக அதே பைப் லைனில் பணிகள் துவங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரோஜ்மா நகர் பொதுமக்கள் கூறியதாவது:மத்திய அரசின் திட்டமான ஜல்ஜீவன் திட்டத்தில் உள்ளூரில் கிடைக்கக்கூடிய தண்ணீரால் அப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். இதுதான் திட்டத்தின் நோக்கம். ஜல்ஜீவன் திட்டத்திற்காக ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திட்டத்திற்கான திட்டப்பணிகள் துவங்கி வரும் நிலையில் தெரு குழாய்கள் அனைத்தையும் முழுவதுமாக அகற்றிவிட்டு 300 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குகிறோம் என கூறுகின்றனர்.ஜல் ஜீவன் திட்டத்திற்காக முறையாக தனி பைப்லைன் மற்றும் மேல்நிலைத் தொட்டி அமைக்கப்பட்டு அவற்றிலிருந்து தண்ணீர் வினியோகம் செய்ய வேண்டும். ஆனால் இத்திட்டத்தின் நோக்கத்தையே கேள்விக்குறியாக மாற்றி ஏற்கனவே உள்ள பைப் லைனில் தண்ணீர் விடும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.இதனால் குறைந்த அழுத்தத்தில் வீடுகளுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். எனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் உரிய முறையில் ஆய்வு செய்து ஜல்ஜீவன் திட்ட பணிகளுக்கான செயல்படுத்தும் நடைமுறையை பொதுமக்களுக்கு முறையாக செய்ய வேண்டும் அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க வேண்டும் என்றனர்.