வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஜெல்லிமீன் பிரியாணி சமைக்கலாமே...
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் அரியமான் கடற்கரையில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்களால் சுற்றுலா பயணிகள் பரிதவிக்கின்றனர்.இம்மாவட்டத்தில் நீண்ட ரம்மியமான அழகிய அரியமான் கடற்கரை உள்ளது. அதிக அலைகள் இல்லாத அமைதியான கடற்கரை என்பதால் சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் தினமும் இங்கு வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.இந்த கடற்கரையில் அச்சத்தை ஏற்படுத்தும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குகின்றன.இதனால் சுற்றுலா பயணிகள் கடலில் நீராட முடியாமல் ஏமாற்றமடைகின்றனர். இம்மீன்கள் அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன.ஜெல்லி மீன்களுக்கு சொறி மீன் என்ற பெயர் உண்டு. குழியுடலிகள் இனத்தை சேர்ந்த கடலில் வாழும் ஒரு உயிரினமாகும். ஜெல்லி மீன்கள் கொட்டும் தன்மை கொண்டது.இவை கொட்டும் போது உடலில் வலியும் அரிப்பும் அதிகம் ஏற்படும். ஜெல்லி மீன்களில் 212 வகைகள் உள்ளன. இதில் தமிழகத்தில் 14 வகையான சைபோசோவான் ஜெல்லி மீன்கள், 5 வகையான கியூபோசோவன் ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன. எல்லா வகை ஜெல்லி மீன்களும் கொட்டும் தன்மையுடையவை. இதில் 2 சதவீதம் ஜெல்லி மீன்கள் உயிருக்கு ஆபத்தானவை. கைரோனாக்ஸ் பிளக்கரி என்ற ஜெல்லி மீன்தான் மிகவும் கொடிய விஷத்தன்மை கொண்டவை. இது கொட்டினால் 3 நிமிடத்தில் இறப்பு நேரிடும். இவை ஆஸ்திரேலிய கடற்கரையில் காணப்படுகின்றன. இந்திய கடற்கரையில் இது காணப்படவில்லை. மீன்களுக்கு உணவாக ஜெல்லி மீன்கள் பயன்படுகின்றன. கிளாத்தி மீன்கள் ஜெல்லி மீன்களை விரும்பி உண்ணும். ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கி இறந்து கிடந்தாலும் அதன் கொட்டும் திறன் உயிர்ப்புடன் இருக்கும். வெறும் கைகளால் ஜெல்லி மீன்களை தொடக்கூடாது என மீன் வள ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.ஜெல்லி மீன்கள் கொட்டிய இடத்தில் வலியும், எரிச்சலும் உண்டாகும். கடையில் விற்கும் வினிகரை வாங்கி கொட்டிய இடத்தில் ஊற்றினால் வலி குறையும். அரை மணி நேரத்திற்கு மேலாக வலி, எரிச்சல், தடிப்பு தொடர்ந்து இருந்தால் மூச்சு திணறல் ஏற்பட்டால் உடனடியாக டாக்டர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என மீன் வள ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜெல்லிமீன் பிரியாணி சமைக்கலாமே...