நகை அடமானக்கடன்: ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளை திரும்ப பெற வேண்டும் வைகை விவசாயிகள் சங்கம் கோரிக்கை
ராமநாதபுரம்: தமிழகத்தில் நகை அடமானக்கடன் பெறும் விவசாயிகள், சாமானிய மக்களை பாதிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி விதித்துள்ள கட்டுப்பாடுகளை திரும்ப பெற வேண்டும் என தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவர் பாக்கியநாதன் கூறியிருப்பதாவது: சாமானிய ஏழை மக்கள் அவசர தேவைக்காக தங்களது குடும்ப நகைகளை வங்கிகளில், பொதுத்துறை நிறுவனங்களில் அடகு வைக்கின்றனர்.கூட்டுறவு வங்கிகள் 11.5 சதவீதத்தில் 95 பைசா வட்டிக்கும், தேசிய வங்கிகள் 8.75 சதவீதம் 75 பைசாவுக்கும், தனியார் நிறுவனங்களில் 21 முதல் 28 சதவீதம் வரை ரூ.2.80 பைசா வட்டிக்கும் கடன்கள் வழங்கப்படுகிறது.தொழில் கார்பரேட் நிறுவனங்கள் 4 சதவீதம் வட்டியில் 16.35 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளன. சிறப்பாக வட்டித் தொகை தள்ளுபடியும் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை நகை அடாமானக்கடனுக்கு விதித்துள்ளது. 916 ஹால்மார்க் தரச் சான்று தேவை என்றும் மாதம் ஒரு முறை வங்கிகளில் வட்டி செலுத்த வேண்டும்.அடகு நகைகளை திருப்புவதில் பல்வேறு குளறுபடிகள் என ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இது இந்தியாவில் உள்ள 140 கோடி மக்களை பாதிக்கும். ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும். தங்கத்தின் மீதான மோகம் மன்னராட்சி முதல் மக்கள் ஆட்சி வரை தொடர்கிறது.மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் நகை அடமானக்கடனுக்கு பழைய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். சாமானிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றார்.