சிறுதானிய செயல்விளக்க வயல்களில் வேளாண் இணை இயக்குனர் ஆய்வு
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே வெங்கலக்குறிச்சி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த செயல் விளக்க வயலை வேளாண் இணை இயக்குனர்(பொ) பாஸ்கரமணியன் ஆய்வு செய்தார். முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்றி சுத்தம் செய்து சிறுதானியம் சாகுபடிக்கு கொண்டு வருவதற்கு பின்னேற்பு மானியமாக ஹெக்டருக்கு ரூ.9600 மானியம் வழங்கப்பட்டு வந்தது. இத்திட்டத்தில் முதுகுளத்துார் அருகே வெங்கலக்குறிச்சி கிராமத்தில் சிறுதானிய பயிர்களான குதிரைவாலி சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இங்கு அமைக்கப்பட்ட வயலை இணை இயக்குனர் பாஸ்கரமணியன் நேரில் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: தற்போது சிறுதானியப்பயிர் கதிர் பிடிக்கும் நிலை எட்டி விட்டதால் பாதுகாத்து அதிக மகசூல் எடுப்பதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது. மேலும் விவசாயத்திற்கு இடுபொருட்கள் வழங்கப்படும் என்றார். உடன் கலெக்டரின் நேர்முக உதவியாளர் வாசுகி, வட்டார வேளாண் உதவி இயக்குனர் கேசவராமன் உட்பட பலர் இருந்தனர். ஏற்பாடுகளை வேளாண் அலுவலர் தமிழ் அகராதி செய்தார்.