உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குப்பை மேடாக மாறும் கண்மாய்: அதிகாரிகள் அலட்சியத்தால் அவலம்

குப்பை மேடாக மாறும் கண்மாய்: அதிகாரிகள் அலட்சியத்தால் அவலம்

ராமநாதபுரம்: மானாங்குடியில் அமைந்துள்ள குப்பை கொட்டும் வளாகத்தால் அங்குள்ள நீர்நிலையும் குப்பை மேடாக மாறி வருகிறது. மானாங்குடி அடுத்த சூரங்காட்டுவலசை பகுதியில் உள்ள கண்மாயை ஒட்டி குப்பையை தரம் பிரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிடங்கில் நாரையூரணி, சூரங்காட்டுவலசை, கடுக்காய்வலசை, சின்னுடையார்வலசை உள்ளிட்ட கிராமங்களில் தேங்கும் மக்கும், மக்காத குப்பை தரம் பிரிக்கப்படுகின்றன. இந்நிலையில் குப்பையை தரம் பிரிக்கும் மையம் முறையாக செயல்படாமல் வெளியில் கொட்டப்படுவதால் அருகில் உள்ள நீர்நிலைகள் மாசடைகிறது. அப்பகுதி மக்கள் கூறியதாவது: பெரியபட்டினம் முதல் நொச்சியூரணி வரையுள்ள கண்மாய்கள் வரிசையாக அமைந்துள்ளன. இதனை முறையாக பராமரிக்காமல் விடுவதால் கடைசியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வருவது கேள்விகுறியாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் சீமைக் கருவேல மரங்கள் முட்புதர் மண்டியுள்ளது.நீர்நிலையோரம் பாலிதீன் கழிவுகள் கொட்டுவதால் தண்ணீர் மாசடைகிறது. சூரங்காட்டுவலசை கண்மாய் ஓரம் குப்பை தரம் பிரிக்கும் மையம் 2020ல் அமைக்கப்பட்டது. தற்போது முறையாக செயல்படாததால் குப்பை மட்டும் கொட்டப்பட்டு நிரம்பியவுடன் தீ வைக்கப்படுகிறது. இதில் தேக்கி வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் கண்மாயில் விழுவதால் தண்ணீர் மாசடைந்து தேக்கி வைக்க முடியாத நிலை உள்ளது. சில இடங்களில் மடைகள் சேதமடைந்து இருப்பதால் தண்ணீர் வந்தாலும் அதனை தேக்கி வைக்க முடிவதில்லை. நீர்நிலை ஓரம் இதுபோன்ற குப்பை கொட்டும் வளாகம் அமைப்பதை கைவிட வேண்டும். விரைவில் வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் கண்மாய்களை முறையாக பராமரித்தால் மழைநீரை தேக்கி வைக்க முடியும். அதனால் கடற்கரையோர கிராமங்களுக்கு நல்ல தண்ணீர் கிடைக்கும். பருவமழைக்கு முன் தண்ணீரை முறையாக தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை