கரிமூட்டம் தொழில் மழையால் பாதிப்பு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் காய்ந்த விறகுகள் கிடைக்காமல் கரிமூட்டம் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் பெரும்பாலான தரிசுநிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இம்மரங்களை வெட்டி கரி மூட்டத் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ராமநாதபுரம், கடலாடி, முதுகுளத்துார், கமுதி, சாயல்குடி, பரமக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய இடங்களில் அதிகமாக இத்தொழில் நடக்கிறது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்துவருவதால் கரிமூட்டம் தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் கூறுகையில் ' ராமநாதபுரம் மாவட்ட கரியை கேரளா, உ.பி.,போன்ற மாநிலங்களுக்கு எரிபொருளுக்காக வியாபாரிகள் வாங்கிச்செல்கின்றனர். கருவேல மரங்கள் ஏக்கருக்கு ரூ.5000 வரை குத்தகைக்கு எடுத்து வெட்டி விறகு எடுக்கிறோம். தற்போது மழையால் விறகு ஈரமாகி வெட்ட முடியவில்லை. வெளியே கடைகளில் சில மாதங்களுக்கு முன் டன் ரூ.3500க்கு விற்ற விறகு ரூ.500 உயர்ந்து தற்போது ரூ.4000த்திற்கு விற்கிறது. விறகு விலை உயர்வு, ஆட்கள்கூலி என முதலீடு அதிகரித்துள்ளது. தற்போது மழைபெய்துவருவதால் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.