கிருஷ்ண ஜெயந்தி உறியடி தேங்காய் ரூ.2 லட்சம் ஏலம்
முதுகுளத்துார்::ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே புளியங்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி உறியடியில் வைத்த தேங்காய் ஒன்று ரூ.2 லட்சத்திற்கு ஏலம் போனது. புளியங்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி உற்ஸவம் நடந்தது. உறிப்பானையில் ஒரு தேங்காய், 5 எலுமிச்சம்பழம் தயிர் வைத்தனர். உறியில் இருந்த பொருட்களின் ஏலம் விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தேங்காயை முதுகுளத்துார் அருகே கொட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த சேதுராமன் சிந்துஜா ரூ.2 லட்சத்திற்கும், 5 எலுமிச்சை பழங்கள் தலா ரூ.80 ஆயிரம், மஞ்சள் காப்பு ரூ.63 ஆயிரம், தார் கம்பு ரூ.53 ஆயிரம், கயிறு ரூ.60 ஆயிரம் என ரூ.7.76 லட்சத்திற்கு பொருட்கள் ஏலம் போனது. ஏலம் எடுத்தவர்கள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஆனால் புளியங்குடி கிராமத்தில் மட்டும் உறியடித்த பொருட்கள் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெறும். ஏலம் எடுத்தால் நினைத்த காரியம் நடக்கும் என நம்புகிறோம். திருமண தடை உள்ளிட்ட வேண்டுதல் வைத்து ஏலம் எடுக்கப்படுவதால் அடுத்த ஆண்டிற்குள் நிறைவேறும் என நம்பிக்கை உள்ளது என்றனர்.