உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையின்றி விவசாயிகள்; விதைப்பு செய்த நெல் விதைகள் எல்லாம் வீணாகின

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையின்றி விவசாயிகள்; விதைப்பு செய்த நெல் விதைகள் எல்லாம் வீணாகின

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து பருவமழை ஏமாற்றி வருவதால் விதைகள் முளைப்பு தன்மையை இழந்து வீணாகியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 3.50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப் படுகிறது. மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை தாலுகாவில் 26,650 எக்டேரில் மட்டும் நெல் சாகுபடி பணிகள் துவங்கியது. உழவுப் பணிகள் முடித்து விவசாயிள் விதைப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாலுகாவில் நெய்வயல், நாகனி, ஆண்டாவூரணி, மங்களக்குடி, அஞ்சுகோட்டை, திருவாடானை, ஆதியூர், செக்காந்திடல், திரு வெற்றியூர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் பெய்யும் மழையை நம்பி நெல் விதைத்து விவசாயம் செய்து வருகிற நிலையில் கடந்த ஆடிப்பட்டத்தின் போது போதிய மழை இல்லாமல் மிகவும் தாமதமாக விவசாயிகள் வயல்களை உழுது சமன் செய்து நெல் விதைகளை துாவினர். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மழை இல்லாமல் வெயில் அதிகரிப்பால் விதைத்த நெல் மணிகள் முளைக்காமல் போனது. மேலும் விதை நெற்களை பறவைகள் உண்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். விவசாயிகள் கூறிய தாவது: மழையை நம்பி விவசாயம் செய்கிறோம். கடந்த சில வாரங்களாக போதிய மழை இல்லாத தால் விதைத்த நெல் மணிகள் முளைக்காமல் பறவைகள் அதனை உணவாக்கி விட்டன. இதனால் மீண்டும் விதை நெல்லை விலை கொடுத்து வாங்கி விதைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டும் நஷ்டம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது என்றனர். தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது. பகலில் மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீட்டில் முடங்கி யுள்ளனர். அனல் காற்று வீசுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை