மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் குழாய்களில் நீர்கசிவு: நோயாளிகள் அவதி
ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புதிய கட்டடத்தில் கட்டி திறக்கப்பட்ட ஓராண்டுக்குள் குழாய்களில் வடியும் நீரால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புதிய கட்டடம் ரூ.154.84 கோடியில் 2023ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு ஆக., மாதம் திறக்கப்பட்டது. இதில் 500 நோயாளிகள் படுக்கைகள், அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரிவு, 10 நவீன அறுவை சிகிச்சை அரங்குகள், என நவீன வசதிகளுடன் கூடிய கட்டடம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதில் முறையாக கழிவு நீர் செல்வதற்கான ஏற்பாடுகள் இல்லாததால் கட்டடத்தில் தண்ணீர் தேங்கியது. அதன் பிறகு இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. தற்போது கழிவு நீர் செல்லும் குழாய்களில் பல இடங்களில் வெளியேறி கட்டடங்களில் வழிந்து வருகிறது.நோயாளிகளுக்கான கழிப்பறைகளில் சிறுநீர் பிறை, மற்றும் கழிவறை பகுதியில் குழாய்களில் திருகுகள் சரியாக இல்லாத நிலையில் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக கழிவறைக்கு செல்லும் நோயாளிகள் வழிந்து ஓடும் நீரில் வழுக்கி விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில் கழிவறைக்கு சென்று வருகின்றனர். கழிவறை, கழிவு நீர் செல்லும் குழாய்களை அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் முறையாக பராமரிப்பு செய்ய முன் வர வேண்டும்.