கீழக்கரையில் கலங்கரை விளக்க தின விழா கொண்டாட்டம் விரைவில் லிப்ட் அமைக்க முடிவு
கீழக்கரை: கீழக்கரையில் கலங்கரை விளக்க தின விழாவை முன்னிட்டு அலுவலகத்தில் கலங்கரை விளக்க தினம் கொண்டாடப்பட்டது. மத்திய அரசின் துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் 2023 முதல் இந்திய கலங்கரை விளக்க தின திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. முன்பு சென்னை மற்றும் கோவாவில் இந்த விழா கொண்டாடப்பட்டது. சென்ற ஆண்டு இந்திய கலங்கரை விளக்கத் திருவிழா ஒடிசா மாநிலம் பூரியில் கடந்த இரண்டு நாட்களாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கலங்கரை விளக்கம் அமைந்துள்ள இடத்தில் துறை தொடர்பான கொடியை கீழக்கரை கலங்கரை விளக்க நிலைய பொறுப்பாளர் தேசிங்கு ஏற்றி வைத்தார். சென்னை கலங்கரை விளக்க இயக்குநர் சத்தியநாராயணன் தலைமை வகித்தார். அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர். கீழக்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் கடல் மட்டத்தில் இருந்து 35 மீ., உயரத்தில் அமைந்துள்ளது. இதன் மேல் பகுதிக்கு செல்ல 136 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்பு மதியம் 3:00 முதல் 5:30 மணி வரை மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. செப்., 1 முதல் தினமும் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரையிலும், மதியம் 2:30 முதல் 5:30 மணி வரை சுற்றுலா பயணிகள் பார்வையிடலாம். உள்ளூர் பயணிகளுக்கு ரூ.10, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ரூ. 25, சிறுவர்களுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பார்வையாளர்களின் வசதிக்காக விரைவில் லிப்ட் வசதி செய்யப்பட உள்ளது. கலங்கரை விளக்க தினத்தை முன்னிட்டு நேற்று மட்டும் இலவசமாக பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.