ராமேஸ்வரம் கோயில் முன் உள்ளூர் பக்தர்கள் மறியல் போலீசாருடன் தள்ளுமுள்ளு : 130 பேர் கைது
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு வழியில் தரிசிக்க இலவச அனுமதி கோரி உள்ளூர் பக்தர்கள் கோயிலுக்குள் நுழைய முயன்றதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மறியலிலில் ஈடுபட்ட 130 பேர் கைது செய்யப்பட்டனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பாரம்பரியமாக உள்ளூர் பக்தர்கள் சிறப்பு வழியில் இலவசமாக தரிசித்து வந்தனர். ஆனால் கடந்த இரு மாதங்களாக இவர்களை ரூ.200 கட்டண வரிசையில் செல்லும்படி கோயில் நிர்வாகம் தெரிவித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் பக்தர்களுக்கு ஆதரவாக ராமேஸ்வரம் மக்கள் பாதுகாப்பு பேரவையினர் நேற்று காலை 10:00 மணிக்கு ராமேஸ்வரம் கோயில் மேலவாசல் வழியாக ஆலய பிரவேச போராட்டம் செய்தனர்.ஆனால் மேலவாசல் முன் தடுப்பு வேலிகள் அமைத்து ராமநாதபுரம் ஏ.டி.எஸ்.பி., சுப்பையா, ராமேஸ்வரம் டி.எஸ்.பி., சாந்தமூர்த்தி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் உள்ளூர் பக்தர்கள், அ.தி.மு.க., -பா.ஜ., - கம்யூ, - காங்., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் என 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதன் தொடர்ச்சியாக உள்ளூர் பக்தர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மேலவாசல் முன் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 130 பேரை போலீசார் கைது செய்து பஸ்சில் ஏற்றிச் சென்றனர். இதனால் திட்டக்குடி, கோயில் மேலவாசல், அக்னி தீர்த்தம் கடற்கரை வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.