| ADDED : ஜூலை 22, 2024 04:40 AM
விவசாயிகள் பாதிப்புபரமக்குடி: மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குவாரிகள் மற்றும் இயற்கை வளங்கள் அழிப்பு போன்ற காரணங்களால் கமுதி, பரமக்குடி உள்ளிட்ட கிராமங்களில் காட்டு விலங்குகளால் விளைச்சல் நிலங்களை புகுந்து பயிர்கள் சேதப்படுத்துகின்றன. இதனால் விவசாயிகளக்கு ரூ.பலஆயிரம் இழப்பு ஏற்படுகிறது.பரமக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சீனி கரும்பு, சோளம், சிறுதானியங்கள், கடலை என பயிரிடப்படுகிறது. மிளகாய், பருத்தி உள்ளிட்ட பயிர்களும் அதிகமான விளைச்சல் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக காட்டு விலங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது.மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குவாரிகள் மற்றும் இயற்கை வளங்கள் அழிப்பு போன்ற காரணங்களால் சமவெளியை நோக்கி விலங்குகள் நகர்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதன்படி வெங்காளூர், கமுதக்குடி, ஊரக்குடி, புதுக்குடி, கீழப்பருத்தியூர் மற்றும் விருதுநகர் மாவட்ட பகுதிகள் காட்டு பன்றிகளுடன், மான்களும் அதிக அளவில் மேய்ச்சலுக்கு வருகின்றன. இதன் மூலம் விவசாயிகள் பல ஏக்கரில் விவசாயம் செய்வதையே முற்றிலும் நிறுத்தி உள்ளனர். இது குறித்து விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மலைச்சாமி கூறியதாவது: 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை காட்டு விலங்குகளை அறியாத விவசாய கிராமங்கள் தற்போது அதிக அளவில் பாதிக்கும் நிலை உள்ளது. இவ்விஷயத்தில் வனத்துறை மெத்தனமாக உள்ளது. கேரளா அரசு விவசாயத்தை அழிக்கும் பன்றிகளை சுட உத்தரவு வழங்கியுள்ளது. அதேபோல் தமிழக அரசும் அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.