உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்துங்க; கூடுதலாக கண்காணிப்பு கேமரா வேண்டும்

ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையை அகலப்படுத்துங்க; கூடுதலாக கண்காணிப்பு கேமரா வேண்டும்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையானது கன்னிராஜபுரம், சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, திருப்புல்லாணி, ராமநாதபுரம், தேவிபட்டினம், திருப்பாலைக்குடி, உப்பூர், நம்புதாளை, தொண்டி, பாசிபட்டினம், எஸ்.பி.பட்டினம் வழியாக செல்கிறது. கன்னியாகுமரி - சென்னையை இணைக்கும் முக்கிய சாலையாக இது உள்ளது. தினமும் பல ஆயிரம் வாகனங்கள் வந்து செல்கின்றன. ராமநாதபுரத்தில் இருந்து எஸ்.பி.பட்டினம் வரை பல்வேறு பகுதிகளில் சாலையின் நடுவே அதிகமான பள்ளங்கள் இருந்ததால் பள்ளங்களை சீரமைத்து, சாலையை உயர்த்தி அமைக்கும் பணி கடந்த ஆண்டு நடந்தது. இருந்த போதும் சாலையை அகலப்படுத்தாததால் விபத்துகள் அதிகரித்து வருகிறது. இச்சாலையில் வெளி மாநிலங்களை சேர்ந்த மீன் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன. நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகமாகி வருகிறது. இந்நிலையில் சாலையை அகலப்படுத்தாமல் பராமரிப்பு பணிகள் மட்டும் நடக்கிறது. இதனால் வேகமாக செல்லும் வாகனங்கள் மோதி உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு திருப்பாலைக்குடி உப்பூர் அருகே திருவெற்றியூர் பாகம் பிரியாள் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பெண்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இரு பெண்கள் சம்பவ இடத்தில் இறந்தனர். இதே போல் ஆக.,2ல் அதிகாலையில் வீரசங்கலிமடம் அருகே நடந்து சென்றவர் மீது வாகனம் மோதியதில் இறந்தார். பெரும்பாலான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாததால் அடையாளம் தெரியாத வாகனம் மோதி தப்பி செல்லும் வாகனங்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே சாலையை அகலப்படுத்தி, கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை