அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டுப்பன்றி பிரசவ வார்டுக்கு பூட்டு
முதுகுளத்துார்:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அரசு மருத்துவமனை பிரசவ வார்டுக்குள் காட்டுப்பன்றி புகுந்ததால் செவிலியர்கள், நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். வார்டுக்கு பூட்டு போடப்பட்டது. முதுகுளத்துார் வட்டாரத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து தினமும் 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகள், வெளி நோயாளிகளாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று செல்கின்றனர். நேற்று காலை 8:30 மணிக்கு திடீரென்று காட்டுப்பன்றி ஒன்று அரசு மருத்துவமனை வளாகத்தில் புகுந்தது. அப்போது சிகிச்சைக்காக நின்ற இரண்டு பேரை முட்டிய நிலையில் பொதுமக்கள் ஊழியர்கள் சத்தமிட்டு அதை விரட்டினர். இதனால் காட்டுப்பன்றி பிரசவ வார்டுக்குள் நுழைந்தது. அங்கு இருந்த நோயாளிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். ஊழியர்கள் சிலர் சாமர்த்தியமாக காட்டுப்பன்றியை பிரசவ வார்டு அறையில் வைத்து பூட்டினர். முதுகுளத்துார் தீயணைப்பு நிலைய அலுவலர் மாடசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் காட்டுப்பன்றியை பிடித்தனர். மூன்று மணி நேரத்திற்கு பிறகு சாயல்குடி வனச்சரகர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான வனத்துறையினர் காட்டுப்பன்றியை வாகனத்தில் துாக்கிச் சென்றனர். முதுகுளத்துார் வட்டாரத்துக்குட்பட்ட கிராமங்களில் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி வந்த நிலையில் தற்போது முதுகுளத்துார் டவுன் பகுதியில் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இப்பிரச்னைக்கு வனத்துறையினர் நிரந்தரமாக தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.