பருவமழையால் பள்ளிகளுக்கு பாதுகாப்பு குறித்த அறிவுரை
திருவாடானை: பருவமழை துவங்க இருப்பதால் பள்ளிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு அதிகளவு பெய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து திருவாடானை வட்டார கல்வி அலுவலர்கள் கூறியதாவது: பருவமழையால் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் மின் இணைப்புகளை கண்காணிப்பது, வடிகால்களை சுத்தம் செய்வது, திறந்தவெளி கால்வாய்களை துார்வாரி மூடுதல், குழிகளை நிரப்புதல் மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள், மரக்கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். கூரைகளில் தண்ணீர் தேங்குவதை கண்காணித்து உடனடியாக அகற்ற வேண்டும். சேதமடைந்த கட்டடங்களை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் சைக்கிள்களில் பள்ளிக்கு வரும் போது பாதுகாப்பாக வர அறிவுறுத்த வேண்டும். தொடர் மழையால் பள்ளியில் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச் சுவர் உறுதித் தன்மையை கண்காணிக்க வேண்டும். மின் கசிவு ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து, உறுதிப்படுத்த வேண்டும். கலெக்டர் பள்ளிகளை பார்வையிட இருப்பதால் கவனமாக செயல்பட ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றனர்.