ராமேஸ்வரத்திற்கு செல்லும் வாகன ஓட்டிகள் உயிருக்கு ஆபத்துங்க.. :குண்டும் குழியுமான ரோடு சீரமைக்கப்படுமா
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்திற்கு விடுமுறை நாட்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களில் வாகனங்களில் வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் சாலை சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தான நிலை உள்ளது.தமிழகம், வெளி மாநிலங்கள் என பல பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்களில் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வருவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக விடுமுறை நாட்கள், அமாவாசை, திருவிழா காலங்களில் ஏராளமானோர் குவிகின்றனர்.இந்நிலையில் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் ரோடு சரிவர பராமரிக்கப்படாமல் சேதமடைந்துள்ளதால் விபத்துக்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக உச்சிபுளி அருகே பெருங்குளத்தில் டோல்கேட் இருந்த பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.இப்பகுதியில் போதிய வெளிச்சம் இல்லாததால் இரவு நேரத்தில் பள்ளங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே தினமும் பல்லாயிரம் வாகனங்கள் செல்லும் ராமேஸ்வரம் ரோட்டில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க வேண்டும்.குறிப்பாக பெருங்குளம் அருகே போர்க்கால அடிப்படையில் ரோட்டை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். அதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.